புறக்கடை வளர்ப்பு முறை

 

    நாம் சாதாரணமாக வீட்டில் பத்து இருபது கோழிகளை வளர்ப்பதே புறக்கடை வளர்ப்பு முறை.

    நாட்டுக்கோழி வளர்ப்பு கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக செயல்பட்டு குடும்ப வருமானத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களின் குடும்பத்துக்கு தேவையான புரதத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. மேலும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டவும் சிறந்த சுய வேலை வாய்ப்பு தொழிலாகவும் உள்ளது. கறிக்கோழியின் விலையை விட நாட்டுக்கோழி இறைச்சியின் விலை அதிகமாக இருந்த போதிலும் நாட்டுக்கோழி இறைச்சி உண்ணும் பழக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. குறைந்த கொழுப்பு சத்து உள்ள ருசியான இறைச்சியே இதற்க்கு காரணம்.


    புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி வளர்ப்பு கிராம மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறது. நாட்டுக்கோழிகள் எவ்வகையான சூழ்நிலையிலும் வளரக்கூடிய திறன் கொண்டவை.

    கிராமங்களில் பெரும்பாலும் நாட்டுக்கோழிகள் முறையான பராமரிப்பு ஏதுமின்றி புறக்கடை முறையிலேயே வளர்க்கப்படுகின்றன, இரவில் கோழிகளை கூடையிலோ, பஞ்சாரத்திலோ, திண்ணைக்கு கீழ் உள்ள இடத்திலோ அல்லது மரத்திலான சிறிய கூண்டுகளில் அடைத்து பின் காலையில் புறக்கடையில் விடுவர். பலரது நாட்டுக்கோழிகள் அவர்களது வீட்டுக்கூரையின் மேல் பகுதியிலும், அருகில் உள்ள மரங்களின் கிளைகளிலும் அடைத்து இரவை கழிகின்றன.