கடக்நாத் (நாட்டுக்கோழி இனங்கள்)


    கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி, கடக்நாத் கோழி ( Kadaknath ) போன்ற பெயர்களால் அழைக்கப்படுவது இந்தியாவில் காணப்படும் கோழியாகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது. இது "'காளி மாசி"' எனவும் அழைக்கப்படுகிறது (" கருப்பு சதை கொண்ட கோழி"). இந்த கோழி இனம் இதன் கருப்பு இறைச்சிக்கும், நல்ல சுவைக்கும் புகழ்பெற்றது.  இதன் இறைச்சி உண்பதால் நல்ல வீரியம் உண்டாவதாக நம்பப்படுகிறது.

    இதன் உடலில் மெலனின் நிறமி மிகுந்து காணப்படுவதால் இவ்வாறு காணப்படுகிறது.  இப்பறவை முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது. கருப்பு தோகையில் பச்சை நிறம் கலந்து வானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள் கொண்டதாகவும், இதன் கால்கள், கால் நகங்கள், அலகு, நாக்கு, தாடி, இறைச்சி, எலும்புகள் போன்ற அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் இருக்கும்.

    இதன் இறைச்சியில் உள்ளதாகக் கூறப்படும் மருத்துவ குணங்களால் இதன் இறைச்சிக்கு அதிக தேவை உள்ளது.


     மத்தியப்பிரதேஷத்தின் மலைப்பகுதியில் உள்ள மக்கள் இந்தக் கோழியை ஆண்மை விருத்திக்கு ஏற்றது என்று பயன்படுத்துகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும் என்றும் நம்பப்படுகிறது.